Showing posts with label திருவாரூர். Show all posts
Showing posts with label திருவாரூர். Show all posts

Monday, 13 February 2012

திருவாரூர்



திருவாரூர்
திருவாரூரில் பிறக்க முக்தி என்பார்கள். பாடல் பெற்ற தலம். பழமையான தஞ்சாவூர் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்தவகையில் உருவான மாவட்டம். இசை மற்றும் கலை, இலக்கியத் துறைகளில் சாதனை படைத்தவர்களின் பூர்வீக பூமி. குடவாசல், திருவாரூர், நீடாமங்கலம், மன்னார்குடி, நன்னிலம், திருத்துறைப்பூண்டி மற்றும் வலங்கைமான் ஆகிய ஏழு வட்டங்களை உள்ளடக்கியது. பத்து வட்டார வளர்சிப் பிரிவுகளும் இங்குள்ளன. இம்மாவட்டத்தில் விவசாயமே முதன்மையான தொழில்.
தியாகராஜ சுவாமி கோயில்
சோழர் காலம் மிளிரும் தியாகராஜ சுவாமி கோயில் பிரம்மாண்டமானது. கோயிலின் எதிரே உள்ள திருக்குளமான கமலாலயம் நீர்ப்பரப்பு கடல் போல தளும்பும். வருடந்தோறும் ஏப்ரல் மாதத்தில் நடக்கும் தேரோட்டம் புகழ்பெற்ற திருவிழா. இக்கோயிலில் கொண்டாடப்படும் பங்குனி உத்திரப் பெருவிழா, தெப்ப உற்சவத்துடன் முடிவுறும். மூன்று நாட்கள் தொடர்ச்சியாகத் தெப்பம் குளத்தைச் சுற்றிவரும். மின்னொளி பட்டு நீர் பளபளக்கும் அழகைப் பார்த்துகொண்டே இருக்கலாம். மற்றொரு சிறப்பும் பெருமையும் திருவாரூருக்கு உண்டு. இங்குதான் இசை மும்மூர்த்திகளான தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீட்சிதர், சியாமளா சாஸ்திரிகள் பிறந்தார்கள்.
பறவைகள் சரணாலயம்
ஏரிக்கரைகளில் .... நீர்ப்பரப்பில் பல வண்ணங்களில் பறவைகளைப் பார்த்து ரசிப்பது சுக அனபவம். திருத்துறைப்பூண்டி வட்டம் உதயமார்த்தாண்டபுரத்திலும், மன்னார்குடியை அடுத்த வடுவூரிலும் பறவைகள் சரணாலயம் இருக்கின்றன. திருத்துறைப் பூண்டியிலிருந்து 20கி.மீ. பயணித்தால் உதயமார்த்தாண்டபுரத்தை அடையலாம். தஞ்சாவூரிலிருந்து வடுவூர் 23 கி.மீ. தொலைவில் உள்ளது.
ஜாம்பவனோடை தர்கா
இஸ்லாமியர்களின் புனிதத் தலம். வாழ்வின் அனைத்துத் தருணங்களிலும் நினைவில் வைத்து முஸ்லிம்கள் வழி படுகிறார்கள். தெய்வீகம் ததும்பும் இடம். திருத்துறைப் பூண்டியலிருந்து 25 கி.மீ. தொலைவைக் கடந்தால் தர்காவை தரிசிக்கலாம்.
ஆலங்குடி சிவன்கோயில்
ஆலங்குடி என்றதும் குருபகவான் ஞாபகத்துக்கு வருவார். திருவாரூரிலிருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ள இந்த சிவன்கோயிலில் நவக்கிரகங்களில் ஒருவரான குருபகவான் சிறப்பிக்கப்படுகிறார். பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கும் திருக்கோயில். மனிதர்களின் மனக்கவலை போக்கும் தலமாகப் பக்தர்களால் வணங்கப்படுகிறது
கூத்தனூர்
கல்வியின் கடவுள் கலைமகள். கலைவடிவான கலைமகள் கூத்தனூரில் கோயில் கொண்டுள்ளார். திருவாரூரிலிருந்து 22 கி.மீ. தூரத்தில் இருக்கிறது.
முத்துப்பேட்டை அலையாத்திவனம்
நீங்கள் பார்த்தே தீரவேண்டிய காயல்காடு. இது முத்துப்பேட்டையில் அமைந்துள்ளது. எண்ணற்ற சுற்றுலாப் பயணிகள் இந்த அலையாத்தி வனத்திற்கு வந்து இளைப்பாறுகின்றனர்.இங்குள்ள காயலில் (உப்பங்கழியில்) 73 வகையான மீன்கள் வாழ்கின்றன. 120 சதுர கி.மீ. கொண்ட இந்த நீர்ப்பரப்பில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஏராளமான நீர்ப்பறவை இனங்கள் கூடுகின்றன. இந்தப் பறவைகளின் கூட்டணி, பரவசத்தின் அணிவகுப்பு.
முத்துப்பேட்டை தர்கா
மிகப் பழமையான தர்கா. இதன் உண்மையான பெயர், ஹக்கீம் ஷேக்கு தாவூத் கமீல் ஒலியுல்லா தர்கா. முத்துப்பேட்டை நகரில் அமைந்துள்ளது. இது மராட்டியர் கட்டடக் கலைப்பாணியில் உருவாக்கப்பட்டது. இந்தத் தர்காவில் உள்ள சமாதியின் நீளம் 40 அடிகள்.
கோதண்டராமர் கோயில்
உள்ளூர் பக்தர்களின் மனங்களில் குடியிருக்கும் கோயில் கோதண்டராமர் கோயில். திருத்துறைப் பூண்டி வட்டம் தில்லை வளாகத்தில் அமைந்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் பிரபலமான ஆலயம் இது.
எண்கண் முருகன் கோயில்
எண்கண் முருகன் இருக்க வேதனை இல்லை என்ற சொல்வழக்கு இருக்கிறது. திருவாரூரில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள இந்தச் சிற்றூரிலுள்ள முருகன் கோயில், ஆன்மீக சிறப்புப் பெற்றது. முருக பக்தர்கள் நாடும் திருத்தலம்.
ராஜகோபால சுவாமி கோயில்
மன்னார்குடியில் அமைந்துள்ள ராஜகோபாலசுவாமி கோயில் மிகவும் புகழ்பெற்றது. இங்கு நிகழும் வெண்ணைத் தாழி திருவிழாவைக் காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும். வருடந்தோறும் இத்திருக்கோயிலில் பங்குனித் திருவிழா நடைபெறும். திருவாரூர் மாவட்டத்தின் மிக முக்கியமான கோயில்களில் இதுவும் ஒன்று. தரிசனம் நன்று.
திருவாரூர் தேர்த் திருவிழா: புகழ்பெற்ற திருவாரூர் தேர்த்திருவிழா தியாகராஜப் பெருமாள் கோயிலில் மார்ச் -ஏப்ரல் மாதங்களில் நடைபெறும்.