Monday 13 February 2012

விருதுநகர்



விருதுநகர்
வியாபாரம் செழித்து தழைக்கும் நகரம்.' எதையுமே உற்பத்தி செய்யாத விருது நகர் எல்லா சரக்குகளையும் கட்டுப்படுத்துகிறது' என்ற பிரபலமான சொல்வழக்கு இந்நகரின் பெருமையைப் பேசுகிறது. விருதுநகர் வியாபாரிகள் நுகர்பொருட்களின் விலையை நிர்ணயிப்பதில் முக்கியப் பங்காற்றுகிறார்கள். விருதுநகரிலிருந்து இலங்கை, துபாய், சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற உலகின் பல பகுதிகளுக்கும் சமையல் எண்ணெய், பருத்தி, மிளகாய், ஏலக்காய் மற்றும் நறுமணப் பொருள்கள் முதலான பலவிதமான பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மதுரைக்குத் தென்மேற்கில் 45 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நடுத்தர நகரம் விருதுநகர்.
அய்யனார் அருவி
அடர்ந்த காட்டின் இயற்கை அழகும், பதினைந்து அடி உயரத்திலிருந்து விழும் சிறு அருவியும் அழகின் உச்சம். இங்குள்ள அய்யனார் கோயில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலம். இந்தப் பேரழகை ரசித்து வர விருதுநகரிலிருந்து 12 கி.மீ. பயணிக்க வேண்டும்.
அருள்மிகு திருமேனிநாதஸ்வாமி கோயில்
தழிழகத்தில் பாண்டியர்கள் கட்டிய பதினான்கு கோயில்களில் பத்தாவதாகக் கட்டப்பட்ட கோயில். இக்கோயிலில் எட்டு வகை லிங்கங்களும் 9 வகை தீர்த்தங்களும் உள்ளன. ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து பார்த்திபனூர் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மிகப் பழமையான திருமேனிநாதனை வழிபடுவது அற்புத அனுபவம்.
அருப்புக்கோட்டை
நெசவுக்கு புகழ்பெற்ற இடம் அருப்புக்கோட்டை. கைத்தறி மற்றும் விசைத்தறி மூலமாகத் துணிகள் நெய்யப்படுகின்றன. கைத்தறியின் வழியே பருத்தி மற்றும் பட்டுப்புடவைகளும், விசைத்தறியின் வழியே துண்டுகள், லுங்கிகள், படுக்கை விரிப்புகள் மற்றும் தலையணை உறைகள் நெய்யப்படுகின்றன. மேலும் நூற்பாலைகளும், சாயத் தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன.
பூமிநாத சுவாமி கோயில்
பாண்டி நாட்டின் புகழ்மிக்க 14 சிவத்தலங்களில் ஒன்று. குண்டாற்றின் தென்கரையில் திருச்சுழியில் இந்த பூமிநாத சுவாமியும், துணை மாலையம்மனும் எழுந்தருளியுள்ளார்கள். சைவ அடிகளார்களான சுந்திரமூர்த்தி நாயனாரும், சேக்கிழாரும் பூமிநாதசுவாமி மீது பதிகங்கள் பாடியுள்ளனர். முத்துராமலிங்க சேதுபதி ஆட்சியில் பலமுறை பல காலகட்டத்திலும் இக்கோயில் புதுபிக்கப்பட்டுள்ளது. விருதுநகரிலிருந்து 40 கி.மீ. தொலைவில் இருக்கிறது இத் திருத்தலம்
இருக்கன்குடி
சாத்தூருக்கு கிழக்கில் அர்ஜீன நதியும், வைப்பாறும் சங்கமிக்கும் இருக்கன்குடியில் புகழ்மிக்க மாரியம்மன் கோயில் உள்ளது. ஆறுகளின் சங்கமத்திற்கு அருகிலேயே அம்மன் கோயில். இங்கு 21 நாட்கள் நடைபெறும் பங்குனி உத்திரப் பெருவிழா வெகு விமரிசையானது. இருக்கன்குடிக்குப் போகாமல் இருக்காதீர்கள்
குகன் பாறை
இந்தச் சிற்றூரின் மேற்கே உள்ள சிறிய மலைக்குன்றாகக் குகன்பாறை உள்ளதால், அப்பெயரிலேயே இந்தக் கிராமமும் அழைக்கப்படுகிறது. இந்த மலையின் அடிவாரத்தில் இயற்கையாக அமைந்த குகை சமணத்துறவிகளின் பள்ளியாகப் பயன்படுத்தப்பட்டது. இம்மடம் முந்நூற்றுவர் பெரும்பள்ளி என்ற பெயரில் நிறுவப்பட்டதாகவும் சீடர்கள் முந்நூற்றுவர் கோயில் பிள்ளைகள் என அழைக்கப்பட்டதாகவும் பத்தாம் நூற்றாண்டின் வட்டெழுத்து கல்வெட்டு கூறுகிறது. வேம்பக்கோட்டையிலிருந்து கழுகுமலை செல்லும் சாலையில் குகன்பாறை அமைந்துள்ளது.
காமராசர் இல்லம்
கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராசர் பிறந்த வீடு நினைவில்லமாக மாற்றப்பட்டுள்ளது. எளிய குடும்பத்தில் பிறந்து ஏற்றம் பெற்றவர். தனக்கென வாழாத தகைமையாளர். பள்ளிக்கு வரும் பிள்ளைகளின் படிப்புக்குப் பசி தடையாகிவிடக் கூடாது என்பதற்காக, முதன்முதலாக மதிய உணவுத் திட்டத்தை செயல்படுத்திய படிக்காத மேதை. அவரது கைக்கடிகாரம், ஆடைகள் மற்றும் பயன்படுத்திய சிலபொருள்களும் நிழற்படங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. காமராசரின் எளிமைக்கு இதைவிட சான்று வேறெங்கும் கிடைக்காது. இந்த எளிமை இனி யாருக்கும் எப்போதும் வாய்க்கப் போவதில்லை.
பிளவாக்கால் அணைக்கட்டு அழகிய தோட்டங்கள் நிறைந்த அணைக்கட்டு. இங்கு நீரில் மிதந்தபடி இயற்கையின் பேரெழிலை ரசிக்கப் படகு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பிளவாக்கால் அணைக்கட்டு -பெரியார் அணைக்கட்டு எனவும் கோயிலார் அணைக்கட்டு எனவும் இரு பிரிவுகளைக் கொண்டுள்ளது. இதுவொரு அழகிய சுற்றுலாத்தலம்.
குள்ளூர் சந்தை நீர்த்தேக்கம்
ஓர் அழகிய தலமாக வளர்ந்துவரும் நீர்த்தேக்கம். அர்ஜீனா நதியின் கிளை ஆறான கௌசிக மகா நதியின் குறுக்கே குள்ளூர் சந்தை நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. பயணிகளின் மகிழ்ச்சிக்காகப் படகுவசதி செய்யப்பட்டுள்ளது. இங்கு ஆகஸ்ட் மாதத்திலிருந்து பிப்ரவரி மாதம் வரை பலவகையான நீர்ப்பறவைகள் வலசை வருகின்றன.
ராஜபாளையம்
பழைய விஜய நகர அரசிலிருந்து வந்த ஒரு பிரிவு மக்கள் இப்பகுதியில் குடியேறியதால், ராஜபாளையம் என்று அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. அவர்களை பெருமைப்படுத்த இப்படி வைத்துள்ளார்கள். நூற்பாலைகள், விசைத்தறி ஆலைகள், மின்சாதனப் பொருள்கள், மரப்பட்டறைகள், மின்மோட்டார் போன்ற தொழிற்சாலைகள் நிறைந்த தொழில் நகரம்.
திருவில்லிப்புத்தூர்
தழிழக அரசின் இலச்சினையே திருவில்லிப்புத்தூர் கோபுரம்தான். காதலின் தனித்துவமான தூய வடிவம் கண்ணனின் காதலி ஆண்டாள் பிறந்த மண். பெரியாழ்வாரின் பெருமைமிகு மகள். நுண்மையான ஆணீன் மீது பெண் கொண்ட மோக உருவே ஆண்டாள் என்று நவீன பெண்ணியவாதிகள் கருதுகிறார்கள். ஆண்டாள் காதலில் உருகுகிறாள். பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஆண்டாள் மட்டுமே பெண். திருப்பாவை பாடிய தெய்வீக பாவை. 12 அடுக்குகளை கொண்டு 192 அடி உயரத்தில் எழுந்து நிற்கும் பிரம்மாண்டமான ராஜகோபுரம் தழிழ்நாட்டின் அடையாளம்.
சவோரியார் தேவாலயம்
புனித பிரான்சிஸ் நினைவாக, பிரான்சிஸ் அசோசியேஷன் கட்டிய தேவாலயம். ஒரு பக்கத்தில் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் ஸ்ரீ கிருஷ்ணர் வருவது போலவும், இஸ்லாத்தைக் குறிக்கும் பிறை நிலவும் கோயிலின் வடிவமைப்பின் பின்பக்கத்தில் கிறிஸ்தவத்தை உணர்த்தும் உயரமான சிலுவையும் தெரிகின்றன. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
செண்பகத் தோப்பு: காட்டு அணில் சரணாலயம்
புலி, சிறுத்தை, நீலகிரி நீண்ட வால் குரங்கு, மிளா, புள்ளிமான், காட்டுப்பன்றி, தேவாங்கு என விலங்கினங்களும், 100 வகையான பறவையினங்களும் வாழும் சரணாலயம். நடமாடும் வாலற்ற மெலிந்த உருவமுடைய விலங்குகள் இங்குண்டு. 480சதுர கி.மீ. பரப்பளவில் திருவில்லிப்புத்தூர் வட்டத்தில் அமைந்துள்ளது.
ரமண மகரிஷி ஆசிரமம்
பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி அவதரித்த திருத்தலம் திருச்சுழி. ரமணரின் ஆன்மீக கருத்துகளை பரப்புவதற்காக, இந்த ஆசிரமம் 1988இல் குண்டாற்றங்கரையில் நிறுவப்பட்து. சுந்தரம் அய்யருக்கும் திருமதி அழகம்மைக்கும் டிசம்பர் 30, 1879 இல் மகனாகப் பிறந்த ரமணரின் சிந்தனைகள் வெளிநாட்டினரைக் கவர்ந்தன. ஜெர்மனியரான பால்பிரண்டன் ரமணரின் உரைகளை மொழிப்பெயர்த்தான். அவரது ஞானத்தை உலகம் அறிந்து கொண்டது. திருச்சுழியில் ரமணர் வாழ்ந்த வீடு 'சுந்தர மந்திரம் ' என்று அழைக்கப்படுகிறது. திருவண்ணாமலையில் ரமணர் ஆசிரமம் உலகப் புகழ் பெற்றது.
சிவகாசி நகரம்
உலகமெங்கும் கொண்டாடப்படும் திருவிழா கொண்டாட்டங்களில் சிவகாசி மத்தாப்புகள் மினமினுக்கும். குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் தொழில் நகரம். நவீன அச்சுத் தொழிலின் உச்ச நகரம். பட்டாசு தீப்பெட்டி தொழிற்சாலைகள் மலிந்த நகரம். ஊரெல்லாம் சந்தோஷ வாண வேடிக்கைகளை உருவாக்கும் கரங்கள் சிவகாசியில்தான் வாழ்கின்றன.
திருத்தங்கல்
தொன்மைமிக்க நகரம். முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் எனப்படும் தமிழின் மூன்று சங்கங்களிலும் இடம்பெற்ற புலவர்களில் முடக்கூரனார், போர்கோலன் , வெண்ணாகனார் மற்றும் ஆதிரேயன் செங்கண்ணனார்ஆகியோர் இங்கு வாழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது.இந்நகரம் விருதுநகர்-சிவகாசி சாலையில் அமைந்துள்ளது
வேம்பக்கோட்டை
தோட்டங்கள், படகு சவாரி ஆகியவற்றில் சிறந்த சுற்றுலாத் தலமாகிறது. வேம்பக்கோட்டை நீர்த்தேக்கம் மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குப் பக்கச் சரிவின் நீரோட்டங்களிலிருந்து இதற்கான நீர் ஆதாரம் கிடைக்கிறது. வைப்பாறு ஆற்றின் ஏழு நீர்ப்பாசனப் பிரிவுகளிலிருந்து நீர் பெறுகிறது. கண்களுக்கு விருந்தளிக்கும் நீர்ப்பரப்பில் மிதந்தபடி பயணிக்கும் அனுபவமே தனிதான்

No comments:

Post a Comment