Monday 13 February 2012

ஈரோடு



ஈரோடு
தந்தை பெரியார் பிறந்த மண். விசைத்தறி, நெசவுக்கும், மஞ்சள் சாகுபடிக்கும் பெயர்பெற்ற மாவட்டம். தமிழகத்தில் புகழ்பெற்ற ஊத்துக்குளி வெண்ணெய், காங்கேயம் காளை இரண்டும் ஈரோடு மாவட்டத்தின் கொடை. உள்நாட்டுத் தேவைக்கு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் இங்கிருந்து பலரது துணிகள் ஏற்றுமதியாகின்றன. இங்கு வழிபடுவதற்கும் குறைவில்லாமல் ஆலயங்கள் இருக்கின்றன. பண்ணாரி அம்மன் கோயில், பவானி ஆறும், காவிரி ஆறும், அமுத நதியும் சங்கமமாகும் பவானி சங்கமேஸ்வரர் ஆலயமும் பக்தர்கள் நாடிவரும் திருத்தலங்களாகும்.
பண்ணாரி அம்மன் கோயில்
தமிழகத்தில் மிகப் புகழ்பெற்ற அம்மன் கோயில்களில் இதுவும் ஒன்று. இக்கோயிலில் குடிகொண்டுள்ள மாரியம்மன் மிகச் சக்தி வாய்ந்த தேவதையாக இப்பகுதி மக்கள் கருதி வழிபடுகிறார்கள். பவானி சாகரிலிருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ள இக்கோயில் ஆயிரக்கணக்கில் பக்தர்களைப் பெற்றுள்ளது.
அந்தியூர் குருநாத சுவாமி கோயில்
பன்முகக் கடவுள்கள் குடிகொண்டுள்ள திருக்கோயில். காமாட்சி அம்மன் பெருமாள் குருநாதசுவாமி என்ற பெயரில் முருகனும் ஒருங்கே எழுந்தருளியுள்ளனர். அந்தியூருக்கு அடுத்துள்ள புதுப்பாளையத்தில் உள்ள முழுமையான கற்கோயில்.
சங்கமேஸ்வரர் கோயில்
பவானி ஆறும், காவிரி ஆறும், அமுத நதியும் சங்கமிக்கும் ஊர் பவானி. இங்குதான் சங்கமேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இது தென்னிந்தியத் திரிவேணி என்றழைக்கப்படுகிறது. சங்கமேஸ்வரர் உடனுறை வேதநாயகியோடு பக்தர்களுக்குத் தரிசனம் தரும் ஆலயம். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின்போது அப்போதைய கோவை, சேலம் மாவட்டங்களின் ஆட்சியராகப் பணியாற்றிய வில்லியம் கேரோ, வேதநாயகி அம்மனை வழிபட்டதாகக் கருதப்படுகிறது. ஒருநாள் அவரது கனவில் வந்து உயிரைக் காப்பாற்றிய தெய்வத்திற்கு நன்றிக்கடனாக அவர் வழங்கிய தந்தத் தொட்டில் இக்கோயிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதில் கேரோவின் கையெழுத்தும் இருக்கிறது.
பவானி சாகர் அணைக்கட்டு
மணலால் கயிறு திரிக்க முடியுமா? என்று ஒரு சொல் வழக்கு உண்டு. இந்த அணை மணலால் கட்டப்பட்டது. சத்திய மங்கலத்திலிருந்து 16 கி.மீ. தொலைவில் பவானி ஆற்றின் குறுக்கே இந்த அணைக்கட்டு நிர்மாணிக்கப்பட்டது. கடல்போல நீர் தேங்கித் ததும்பும் அழகை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
சென்னி மலை
நெசவுக்குப் புகழ்பெற்ற நகரம் சென்னிமலை. திருப்புகழ் பாடிப் பரவிய அருணகிரிநாதர் இறைவனிடம் ஆசிகளாகப் படிக்காசு பெற்ற இடம் என்ற பெருமைக்குரியது. சென்னிமலை உச்சியில் குடிகொண்டுள்ள முருகன் கோயிலுக்குச் செல்ல சிறப்புப் பேருந்து வசதிகள் உண்டு. சென்னிமலைக்குச் செல்ல கோவைக்குச் செல்லும் வழியில் இங்கூர் ரயில நிலையத்திலிருந்து தெற்கே 7 கி.மீ. செல்ல வேண்டும். ஈரோட்டிலிருந்து 26 கி.மீ. தொலைவிலும் பெருந்துறையிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
கொடுமுடி
கொடுமுடி சிவன் கோயிலில் விஷ்ணுவிற்கும் பிரம்மாவிற்கும் தனித்தனி சந்நதிகள் உள்ளன. இத்திருக்கோயிலில் உள்ள சிவனை மச்ச கண்டீஸ்வரர் எனவும் விஷ்ணுவை வீர நாராயணப் பெருமான் எனவும் பக்தர்கள் போற்றி வணங்குகிறார்கள். ஈரோடு மாவட்டத்தின் சிறப்பு வாய்ந்த கோயில்.
ஸ்ரீ கொண்டாத்து காளியம்மன் கோயில்
முழுவதும் சலவைக் கற்களால் உருவான கோயில் இது. கோபிச் செட்டிப்பாளையம் அருகே பாரியூரில் அமைந்துள்ளது. பாரியூரைச் சேர்ந்த கோபிச்செட்டி என்னும் முதியவர் வியாபாரம் செய்ததால் கோபிச் செட்டிப்பாளையம் என அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இன்றும்கூட இங்கே அம்மன் முன்னிலையில் பூப்போட்டு பார்க்கும் பழக்கம் நடைமுறையில் இருக்கிறது. இக்கோயிலின் பரப்பு 5 ஏக்கர். கோபியிலிருந்து அந்தியூர் செல்லும் சாலையில் 4 கி.மீ. சென்றால் பாரியூரை அடையலாம்.
பவானி கூடுதுறை
பவானி ஆறு, காவிரி ஆறு, அமுத நதி இணையும் இடம் கூடுதுறை என அழைக்கப்படுகிறது. நதிகளின் சங்கமத்தை பார்க்கத்தான் வேண்டும். இயற்கையின் பேரெழில் அங்கே கூத்தாடும்.
கொடிவேரி அணைக்கட்டு
அலை அலையாய் தண்ணீர், திசையெங்கும் பரந்த நீர்க்காடு, கோபியிலிருந்து 10 கி.மீ. தொலைவு பயணித்தால் இந்த அணைக்கட்டு நம் பார்வைக்கு வந்துவிடும்.
தந்தை பெரியார் நினைவிடம்
சமூகப் புரட்சிக்காரர், பகுத்தறிவுப் பகலவன், தந்தை பெரியார் சிறு குழந்தையாய், துறுதுறு இளைஞனாய், கடமையுணர்வுமிக்க காங்கிரஸ் தொண்டராய் வாழ்ந்த இடம். இந்தப் பெரியாரின் இல்லம் இப்போது நினைவிடமாக உள்ளது. இங்கு பெரியாரது சிலை, வாழ்க்கை வரலாறு நிழற்படங்கள், முதலியன பார்வைக்கு உள்ளன. தமிழர்களின் இனமானம் காத்த தலைவரின் தொட்டில் பூமி. இந்த நினைவிடம் பெரியார் சாலை, ஈரோடு - 1 என்னும் முகவரியில் அமைந்துள்ளது.
கைத்தறிவு நெசவு:- ஈரோடு மாவட்டம் ஆடை ஏற்றுமதியில் தமிழ்நாட்டில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கு வேட்டி பிரிண்ட் ஆடைகள், கைலி, படுக்கை விரிப்புகள், உள்ளாடைகள், மிதியடிகள், கைக்குட்டைகள் மற்றும் பல உற்பத்திகள் நடைபெற்று வருகின்றன.
மஞ்சள்:- ஈரோடு மாவட்டத்தில் மிக முக்கியமான சந்தைகளில் ஒன்று மஞ்சள். இங்குதான் தமிழ்நாட்டின் மஞ்சள் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இங்கிருந்து மஞ்சள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment