Monday 13 February 2012

தர்மபுரி



தர்மபுரி
தகடூர் என்றால் யாருக்கும் புரியாது. இதன் சரித்திரப் பெயர் இதுதான். ஒளவைக்கு நெல்லிக்கனி ஈந்த அதியமான் ஆண்ட இடம். ஹெhய்சலர்கள், பாண்டியர்கள், விஜயநகரப் பேரரசர்கள், பீஜப்பூர் கோல்கொண்டா சுல்தான்கள், நாயக்கர்கள் ஆகிய பல பேரரசுகளின் கீழ் தருமபுரி இருந்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் விரும்பும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி இந்த மாவட்டத்தில்தான் உள்ளது.
அதியமான் கோட்டை
இங்கு கோட்டை இருந்ததற்கான அடையாளங்களின் எச்சங்கள் மட்டுமே உள்ளன. தகடூர் அரசன் அதியமான் ஆட்சி செலுத்திய இடம். இக்கோட்டையின் அருகே கிருஷ்ணதேவராயரும் ஹெhய்சல் அரசர்களும் இணைந்து கட்டிய சென்றாயப் பெருமாள் கோயில் அவர்களின் நட்பைப் பறைசாற்றி நிற்கிறது. இந்தக் கோயிலின் கர்ப்பக்கிரகத்திற்குச் செல்லும் மண்டபத்தின் உட்கூரைகளில் மகாபாரதம், கிருஷ்ண விஸ்வரூப தரிசனம், ராமாயணக் காட்சிகள் பலவும் அற்புதச் சித்திரங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. இவை பார்வையாளர்களின் மனங்கவரும் வண்ணச் சித்திரங்கள்.
ஒகேனக்கல்
ஊரெல்லாம் தெரிந்த அருவி இது. தமிழகத்தின் புகழ்பெற்ற அழகிய அருவி காவிரியின் கிளை நதியிலிருந்து பேரிரைச்சலுடன் 20 மீட்டர் உயரத்திலிருந்து இவ்வருவி கொட்டும் அழகே தனிதான். விடுமுறை நாட்களை உல்லாசமாய் ஒகேனக்கலில் கழிக்க சுற்றுலாப் பயணிகள் மிகவும் விரும்புவார்கள். மலைகள் சூழ்ந்த பிரதேசத்தில் நீரில் மிதந்தபடி பரிசலில் செல்ல பயணிகள் மிகவும் விரும்புவார்கள்.
சுப்பிரமணிய சிவா நினைவிடம்
தேச விடுதலைப் போராட்டத்தில் சுப்பிரமணிய சிவாவின் பெயர் நீக்கமற நிறைந்திருக்கிறது. சுதந்திர வேள்வியில் தன் வாழ்வையே அர்ப்பணித்தவர் சிவா. அவரது சமாதியின் மீது எழுப்பப்பட்ட நினைவிடம் இது. பெண்ணாகரம் வட்டம் பாப்பாபட்டியில் உள்ளது.
அனுமந்த தீர்த்தம்
அரூர் வட்டத்திலுள்ள தீர்த்தமலை எனும் புனிதத் தலத்தோடு தொடர்புடையது இந்தத் தீர்த்தம். இதற்குப் பின் ஒரு புராணக் கதை இருக்கிறது. தீர்த்தமலையில் தவம் செய்த ராமபிரான் கங்கை நீர் வேண்டுமென அனுமனை வேண்ட குறிப்பிட்ட நேரத்திற்குள் கொண்டுவர முடியாமல் அனுமன் தாமதப்படுத்தியதால் ராமன் தன் அஸ்திரப் பிரயோகத்தால் அதைப் பெறுகிறார். அனுமன் தான் கொண்டு வந்த கங்கை நீர் பயன்படவில்லையே என வருந்தி விட்டெறிந்தபோது சிதறிய துளிகளே அனுமந்த தீர்த்தமாக நம்பப்படுகிறது. இத்தீர்த்தம் ஊத்தங்கரையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் பெண்ணையாற்றங்கரையில் உள்ளது.
தீர்த்தமலை
தருமபுரி மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க புனிதத்தலம். புகழ்பெற்ற ஸ்ரீதீர்த்தகிரிஸ்வரர் ஆலயம். இவ்வாலயம் தீர்த்த மலையில்தான் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலுக்கு சோழர்களும் விஜயநகரப் பேரரசர்களும் மிகுந்த பொருளுதவி செய்துள்ளனர். இங்கு மகா சிவராத்திரியின்போது வழிபட பக்தர்களின் கூட்டம் அலைமோதும். தீர்த்தமலை ஒரு சுற்றுலாத் தலமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறையின் பயணிகள் தங்கும் விடுதி வசதி இங்குண்டு. இம்மலை அரூர் வட்டத்தில் உள்ளது.

No comments:

Post a Comment