Monday 13 February 2012

திருவண்ணாமலை



திருவண்ணாமலை
திருவண்ணாமலை என்றாலே முதலில் நினைவுக்கு வருவது கார்த்திகை தீபம். அடுத்து நினைவுக்கு வருவது கிரிவலம். 100க்கும் மேற்பட்ட சைவத் திருத்தலங்களில் முக்கியமானது. இந்தக் கோயிலின் பிரதான கோபுரம் 66 மீட்டர் உயரத்தில் 13 அடுக்குகள் கொண்டது. ஆயிரம் கால்கள் கொண்ட பெருமண்டபம் ஒன்றும் உள்ளது. சென்னையிலிருந்து ஏராளமான பேருந்து வசதிகள் உள்ளன.
அருணாச்சலேஸ்வரர் கோயில்
திருவண்ணாமலையின் அடிவாரத்தில்தான் அருணாச்சலேஸ்வரர் கோயில் கொண்டிருக்கிறார். இங்கு இறைவன் பஞ்சபூதங்களில் அக்னி வடிவத்தில் எழுந்தருளி இருக்கிறார். அதனால்தான் ஜோதிலிங்கமாக கோலாச்சுகிறார். இக்கோயிலின் கோபுரங்கள் கம்பீரமாக எழுந்து நிற்கின்றன.
வழிபாட்டு நேரங்கள் : காலை சந்தி-காலை 8மணி, உச்சிகாலம்-காலை 10 மாலை 6 மணி. இரண்டாம் கால பூi -இரவு 8மணி நடுஜாமம் : இரவு 9.30 மணி. தொலைபேசி: 04175-2224915.
கிரிவலம்
புகழ்பெற்ற கார்த்திகை தீபம் தெரியும் திருவண்ணாமலையின் உயரம் கடல் மட்டத்திலிருந்து 2609 அடி. அதாவது 800 மீட்டர் உயரம் உடையது. இம்மலையை சுற்றி 16 கி.மீ. நீளத்தில் சாலை உள்ளது. இம்மலையையே சிவனாகப் பாவிக்கும் பக்தர்கள், கார்த்திகை மற்றும் பௌர்ணமி நாட்கள், தழிழ் மாதங்களின் முதல் நாள் ஆகிய சிவனுக்கு உகந்த நாட்களில், இந்த 16 கி.மீ. தூரத்தையும் கால்நடையாக வலம் வந்து வணங்குகிறார்கள். அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற பக்தி முழக்கத்துடன் மலையைச்சுற்றி வரும் இந்த வழிபாட்டு முறைக்குத்தான், கிரிவலம் என்று பெயர். உலகெங்கிலுமிருந்து பக்தர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள்.
சாத்தனூர் அணை
பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புகழ்பெற்ற அணைக்கட்டு. மலையும் வளமும் சூழ, இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் ரம்மியமான அணைக்கட்டுப் பகுதி இது. நீச்சல் குளம், முதலைப் பண்ணை, சிறுவர் இரயில், படகுச் சவாரி, இரும்பு தொங்குபாலம், வண்ணமீன் காட்சி என குழந்தைகளைக் கவரும் குதூகலக் காட்சிகள் ஏராளமாக உள்ளன.
ஸ்ரீ ரமணமகரிஷி ஆசிரமம்
இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற ஆன்மீகப் பேரொளியாத் திகழ்ந்தவர். 'குறைவாகப் பேசி அதிகமாகச் சாதித்தவர்' என்கிறார் இவரைப் பற்றி குறிப்பிடும் ஓஷோ. அகநிலை விசாரணையின் இறுதியாகக் கிடைக்கும் மனஓர்மை நிலையே இவருடைய தத்துவ இலக்கு. இங்குள்ள தியான மண்டபம் அமைதி, சாந்தம், எளிமை, தூய்மை ஆகியவை குடிகொண்டிருக்கும் ஆன்மீகப் பெருவெளியாகும். தொலைபேசி: 04175-237491
ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம்
இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்தவர். திருவண்ணாமலையில் இருக்கும் புனிதமான இடங்களில் இந்த ஆசிரமும் ஒன்று. தொலைபேசி: 04175-224999
ஸ்ரீ யோகி ராம்சுரத் குமார் ஆசிரமம்
விசிறி சாமியார் என்று அன்பர்களால் அழைக்கப்பட்ட யோகி ராம் சுரத் குமாரின் ஆசிரமம், அமைதி நிறைந்தது. உலகம் முழுவதிலும் இவருக்கு சீடர்கள் உண்டு. கடந்த 2000 ஆம் ஆண்டு யோகி ராம்சுரத் குமார் முக்தி அடைந்தார். இப்போதும் இந்த ஆசிரமத்துக்கு சீடர்கள் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். தொலைபேசி: 04175-235984
திருவண்ணாமலை கார்த்திகை தீபம்: கார்த்திகை மாதம், பௌர்ணமியும் கிருத்திகையும் கூடிய நாளில், திருவண்ணாமலையின் உச்சியில் ஏற்றப்படும் உலகப்புகழ் பெற்ற தீப்பெருந் திருவிழா.

No comments:

Post a Comment